“எந்த கம்பனி, ஏர்டெல், ஏர்செல் இல்ல வோடபோன்”
“எதுல ரேட் கம்மியா இருக்கோ அது கொடுங்க”
“சரி உன்னோட அடையாள அட்டை அப்புறம் வீட்டு முகவரி அத்தாட்சி ரெண்டும் கொடு”
“எதுக்கு சார்”
“அரசாங்க உத்தரவு பா”
“அப்படி எங்கிட்ட எதுவும் இல்ல சார்”
“அடையாள அத்தாட்சி இல்லாம எதுவும் கொடுக்க முடியாது தம்பி”
“வேற வழியே இல்லயா சார், எனக்கு அவசரமா தேவைப்படுது”
“நான் என்னப்பா பண்ணுறது, எதாவது அடையாள அட்டை கண்டிப்பா இருக்கணும் பா, டிரைவிங் லைசென்ஸ் இல்ல ஓட்டு உரிமம் இப்படி எதாவது உன் பெயரில் இருக்கணும்”
“சரி சார்” என சோகத்துடன் வெளியேறினான் முத்து.
முத்து கோவையில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, 12ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு
வீட்டுப் பிரச்சினைகளை தாங்க முடியாமல் சென்னைக்கு வேலை தேடி ரயில் ஏறியவன். இங்கு இரண்டு நாட்களாக தன் பள்ளி நண்பன் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடிக் கொண்டு இருக்கிறான்.
17 வயது மட்டுமே நிரம்பிய முத்து, சோகங்களும் சுமைகளுமே சொந்தமான வாழ்க்கையில்
தன் எதிர்காலம் தேடி சென்னையின் இரு கரங்களிலும் தவழ்கிறான் ஒரு மழலை போல.
“டேய்! ராஜா, எனக்கு சிம்கார்டு கிடைக்கல டா, எதாவது அடையாள அட்டை வேணும்மாம்டா” தன் நண்பனிடம் முத்து.
“ஆமாண்ட, எனக்கும் இதுதான் நடந்தது, அதனால தான் நான் எங்கப்பாவோட சிம்கார்டு வைத்து இருக்கிறேன்” என்றான் ராஜா.
“நமக்கு 18 வயது முடியாம, எந்த அரசாங்க அடையாள அட்டையும் வாங்க முடியாது டா” என்றான் ராஜா மீண்டும்.
“அப்படின்னா இங்க பிறந்து வளர்ந்து சுயமா வேலை செய்யணும்னு நினைக்கற நாமெல்லாம் இருந்தும் அடையாளம் இல்லாத அநாதைகள் தானே” என்றான் ஒரு வித சோகத்தில்.
“ஆமாண்டா, வேற வழியில்லை, நம்ம அப்பாவோட ரேஷன் கார்டும் அதுல இருக்கிற நம்ம பேரும் தான் நமக்கான ஒரே அடையாளம்” என்றான் ராஜா அப்பாவியாக.
இரவு படுக்கையில் தனியாக உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்கிறான் முத்து.
“வேலை தேடி வந்தவனுக்கு தன் தாய் நாட்டிலேயே இன்னும் அடையாளம் இல்லாத அநாதையாக
இருப்பதை நினைக்கையில் அழுகையாய் வந்தது. தாய் மற்றும் தந்தை அரவனைப்பில் எவ்வளவு சுகமாக இருந்தோம், இன்று தனிமை என்று வந்தவுடன் சமுதாய பிசாசின் கையில் எப்படி மாட்டி முழிக்கிறோம் என எண்ணி வாடிப் போனான்.
ஏன் நமக்கு அடையாளம் இல்லை, நாமும் இங்கேதானே பிறந்தோம், இடம் வேறு என்றாலும் இனம் ஒன்று தானே! சாதி வேறு என்றாலும் சதையும் ரத்தமும் ஒன்றுதானே!.
இதை ஏன் யாரும் கேட்கவில்லை ? ஏன் எந்த சட்டமும் போடவில்லை? ஏன் எந்த கட்சியும் கண்டுகொள்ளவில்லை? எங்களுக்கு ஓட்டு இல்லாத காரணமா? இல்லை நாங்கள் ஒன்றும் தெரியாத சிறுவர்கள் என்ற மெத்தனமா?
என நினைத்துக் கொண்டு எழுதுகிறான்.
பெறுநர் :
உயர்திரு. அப்துல்கலாம்,
முன்னாள் குடியரசுத்தலைவர்,
இந்தியா.
அனுப்புநர் :
18வயது நிரம்பாத அடையாளம் இல்லாத
இந்தியன்.
அடையாளம் இல்லாத இந்தியன் எழுதிக்கொள்வது................
இன்னும் எழுதிகொண்டு இருக்கின்றனர் இதுபோல் ஆயிரம் முத்துகள் இந்தியாவில்..../
நண்பர்களே! இது என்னுடைய வாழ்வில் நான் அனுபவித்த விசயம், அந்த முத்து என் கதாபாத்திரமே!. மேலும் இது என்னுடைய நான் எழுதும் முதல் சிறுகதை இது..எனவே தவறு இருந்தால் மன்னிக்கவும்.
பின்னர் உங்கள் மேலான கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்...
6 comments:
wish u all the best
nanri sivakumaran
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் வினோத்..
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
வாழ்த்துக்கள் நண்பரே....
தொடருங்கள்...
Post a Comment