Tamil 10

Monday, June 29, 2009

அடையாளம் ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக)

“சார்! எனக்கு ஒரு சிம்கார்டு வேணும்”
“எந்த கம்பனி, ஏர்டெல், ஏர்செல் இல்ல வோடபோன்”
“எதுல ரேட் கம்மியா இருக்கோ அது கொடுங்க”
“சரி உன்னோட அடையாள அட்டை அப்புறம் வீட்டு முகவரி அத்தாட்சி ரெண்டும் கொடு”
“எதுக்கு சார்”
“அரசாங்க உத்தரவு பா”
“அப்படி எங்கிட்ட எதுவும் இல்ல சார்”
“அடையாள அத்தாட்சி இல்லாம எதுவும் கொடுக்க முடியாது தம்பி”
“வேற வழியே இல்லயா சார், எனக்கு அவசரமா தேவைப்படுது”
“நான் என்னப்பா பண்ணுறது, எதாவது அடையாள அட்டை கண்டிப்பா இருக்கணும் பா, டிரைவிங் லைசென்ஸ் இல்ல ஓட்டு உரிமம் இப்படி எதாவது உன் பெயரில் இருக்கணும்”
“சரி சார்” என சோகத்துடன் வெளியேறினான் முத்து.

முத்து கோவையில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, 12ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு
வீட்டுப் பிரச்சினைகளை தாங்க முடியாமல் சென்னைக்கு வேலை தேடி ரயில் ஏறியவன். இங்கு இரண்டு நாட்களாக தன் பள்ளி நண்பன் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடிக் கொண்டு இருக்கிறான்.

17 வயது மட்டுமே நிரம்பிய முத்து, சோகங்களும் சுமைகளுமே சொந்தமான வாழ்க்கையில்
தன் எதிர்காலம் தேடி சென்னையின் இரு கரங்களிலும் தவழ்கிறான் ஒரு மழலை போல.

“டேய்! ராஜா, எனக்கு சிம்கார்டு கிடைக்கல டா, எதாவது அடையாள அட்டை வேணும்மாம்டா” தன் நண்பனிடம் முத்து.
“ஆமாண்ட, எனக்கும் இதுதான் நடந்தது, அதனால தான் நான் எங்கப்பாவோட சிம்கார்டு வைத்து இருக்கிறேன்” என்றான் ராஜா.
“நமக்கு 18 வயது முடியாம, எந்த அரசாங்க அடையாள அட்டையும் வாங்க முடியாது டா” என்றான் ராஜா மீண்டும்.
“அப்படின்னா இங்க பிறந்து வளர்ந்து சுயமா வேலை செய்யணும்னு நினைக்கற நாமெல்லாம் இருந்தும் அடையாளம் இல்லாத அநாதைகள் தானே” என்றான் ஒரு வித சோகத்தில்.
“ஆமாண்டா, வேற வழியில்லை, நம்ம அப்பாவோட ரேஷன் கார்டும் அதுல இருக்கிற நம்ம பேரும் தான் நமக்கான ஒரே அடையாளம்” என்றான் ராஜா அப்பாவியாக.

இரவு படுக்கையில் தனியாக உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்கிறான் முத்து.
“வேலை தேடி வந்தவனுக்கு தன் தாய் நாட்டிலேயே இன்னும் அடையாளம் இல்லாத அநாதையாக
இருப்பதை நினைக்கையில் அழுகையாய் வந்தது. தாய் மற்றும் தந்தை அரவனைப்பில் எவ்வளவு சுகமாக இருந்தோம், இன்று தனிமை என்று வந்தவுடன் சமுதாய பிசாசின் கையில் எப்படி மாட்டி முழிக்கிறோம் என எண்ணி வாடிப் போனான்.

ஏன் நமக்கு அடையாளம் இல்லை, நாமும் இங்கேதானே பிறந்தோம், இடம் வேறு என்றாலும் இனம் ஒன்று தானே! சாதி வேறு என்றாலும் சதையும் ரத்தமும் ஒன்றுதானே!. 

18வயது நிரம்பாதவன் இந்தியாவில் இருந்தும் அடையாளம் இல்லாத அநாதைதானா?

இதை ஏன் யாரும் கேட்கவில்லை ? ஏன் எந்த சட்டமும் போடவில்லை? ஏன் எந்த கட்சியும் கண்டுகொள்ளவில்லை? எங்களுக்கு ஓட்டு இல்லாத காரணமா? இல்லை நாங்கள் ஒன்றும் தெரியாத சிறுவர்கள் என்ற மெத்தனமா?


இதை யாருக்காவது தெரிவிக்க வேண்டும்? யாருக்கு தெரிவிப்பது? ஆ! அப்துல் கலாம் அவருக்கு எழுதுவோம், ஆனால் முகவரி ? பரவாயிலை, இந்தியாவில் அவரை தெரியாதவன் இருக்க முடியாது”
என நினைத்துக் கொண்டு எழுதுகிறான்.

பெறுநர் :
 உயர்திரு. அப்துல்கலாம்,

 முன்னாள் குடியரசுத்தலைவர்,

இந்தியா.


அனுப்புநர் :

 முத்து,
 18வயது நிரம்பாத அடையாளம் இல்லாத 

 இந்தியன்.


அன்புள்ள அப்துல்கலாம் அவர்களுக்கு,

  அடையாளம் இல்லாத இந்தியன் எழுதிக்கொள்வது................

இன்னும் எழுதிகொண்டு இருக்கின்றனர் இதுபோல் ஆயிரம் முத்துகள் இந்தியாவில்..../

நண்பர்களே! இது என்னுடைய வாழ்வில் நான் அனுபவித்த விசயம், அந்த முத்து என் கதாபாத்திரமே!. மேலும் இது என்னுடைய நான் எழுதும் முதல் சிறுகதை இது..எனவே தவறு இருந்தால் மன்னிக்கவும்.
பின்னர் உங்கள் மேலான கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்...

Top Tamil Blogs by Tamilers

Wednesday, June 17, 2009

OK என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

ஏதோ பொழுது போகல, அதான் வந்து சும்மா ஒரு மொக்க பதிவு போடலாம்னு வந்தேன். என்னத்த போடுறதுன்னு ஒன்னும் புரியலை. சரி நமக்கு தெரிஞ்ச விசயத்த நாலு பேரு தெரிஞ்சுக்கட்டுமேன்னு தான் இந்த பதிவு.. நம்ம போன்ல பேசும் போது இல்ல வேற பிகர் முன்னாடு பேசும் போதும் என்னமோ அமெரிக்க ரிட்டர்ன் மாதிரி OK,...OK...OK.....னு பில்டப் பண்ணுவோம். அதோட உண்மையான அர்த்தம் என்ன அப்படின்னு நாம யோசிச்சிருப்போம்...

OK என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?  முன்னொரு காலத்தில் போரில் இருந்து திரும்பி
வரும் படைகள் எந்த வித சேதாரமும் இன்றி வந்தால் (அதாவது எந்த ஒரு உயிரிழப்பும் இல்லாமல்) அதை ஒரு இடத்தில் “0 KILLED” என்று எழுதி மாட்டி வைப்பார்களாம்.அதிலிருந்து தான் OK – O.Killed என்று அர்த்தம் வந்தது.ECHO என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?கிரேக்க கடவுள் ஜுபிடர் தன் மனைவி ஜுனோவை ஏமாற்றும் பொருட்டு அவளோடு அரட்டை அடிக்க ஒரு இளம் அழகிய தேவதையை ஏற்பாடு செய்கிறார். அவ்வாறு தன் மனைவி அரட்டை அடிக்கும் சமயம் மற்ற பெண்களோடு உல்லாசமாக இருப்பது ஜுபிடரின் வழக்கம். ஒரு நாள் இதை அறிந்த ஜுனோ வெகுண்டு எழுந்து தன்னிடம் அரட்டை அடிக்கும் தேவதை எக்கோவை தண்டிக்கிறாள். அந்த தேவதையின் குரலைப் பறித்துக் கொண்டு அடுத்தவர்கள் பேசுவதில் கடைசி வார்த்தையை மட்டும் அவள் உச்சரிக்கும்படி செய்து சாபம் விடுகிறாள். அதனால்தான் நாம் பேசும் போது கடைசி சொல் மட்டுமே எதிரொலிப்பதை ஆங்கிலத்தில் அந்த தேவதையின் ஞாபகமாக எக்கோ (Echo) என்று பெயர் வந்தது.


பதிவு மொக்கையா இருக்குதுன்னு நீங்க என்னை மொக்க பண்ணாம ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்க சாமி.
Top Tamil Blogs by Tamilers

Wednesday, June 10, 2009

FUCK என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா? (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)

  FUCK என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா? இந்த உலகமே இந்த ஒரு வார்த்தையின் அடிப்படை விளையாட்டில் தான் இவ்வளவு காலம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த செயல் மட்டும் இல்லை என்றால் என்றோ நாம் சந்ததி இல்லாமல் அழிந்து போயிருப்போம். ஆனால் இந்த வார்த்தையும் இந்த செயலையும் பற்றி பேசினால் அநாகரிகம் என்ற தவறான முறையை இன்றும் நாம் முறை தவறாமல் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம். செக்ஸ் கல்வியின் அவசியம் இந்தியா எய்ட்ஸில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்தும் பல பேருக்கு புரியவில்லை.

சரி நம் விசயத்திற்கு வருவோம்..முற்கால இங்கிலாந்தில் அரசனின் அனுமதியில்லாமல் குடிமக்கள் யாரும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அவர்களுக்கு குழந்தை வேண்டும் அல்லது உறவு வேண்டும் எனில் அரசனிடம் முறையான அனுமதி வாங்க வேண்டும். அப்போது அரசனிடமிருந்து ஒரு உலோக பட்டை அவர்களுக்கு அளிக்கப்படும்.
அதை அவர்கள் உறவு கொள்ளும் சமயம் தங்கள் வீட்டிற்கு வெளியே தொங்க விட வேண்டும். அந்த பட்டையில் Fornication Under the Consent of King என்று எழுதியிருக்கும். அதன்சுருக்கம் தான் FUCK (Fornication Under the Consent of King) என்ற வார்த்தை.


புரியுது, நீங்கள் முனுமுனுப்பது. அதெப்படி ஒவ்வொரு வீடாக வந்து பார்க்கவா போகிறார்கள் என்று..அக்கால்த்தில் அரசன் பேச்சை கேட்கும் ஒரு நல்ல குடிமக்களாக இருந்திருந்தால் வாய்ப்பு உள்ளது அல்லவா?. ஆனால் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது, இதனால் தான் மன்னர்கள் இரவு நேரங்களில் மாறு வேடம் பூண்டு நகர்வலம் வருகிறார்களோ என்று..

எல்லாரும் பல்ல நறநறன்னு கடிக்கற சத்தம் கேட்குது..இருந்தாலும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுட்டு உங்க் வோட்டு உரிமைய காப்பாத்திட்டு, கொஞ்சம் அறிவுரையும் சொல்லிட்டுப் போங்க...


Top Tamil Blogs by Tamilers

Monday, June 8, 2009

அண்ணன் தம்பி இருவரும் இரட்டையர்கள். ஆனால் தம்பி அண்ணனுக்கு இரண்டு நாள் முன்னதாக பிறந்த நாள் கொண்டாடுகிறான் எப்படி?

இரண்டு பேரும் இரட்டையர்கள். ஆன தம்பி முன்னாடியே பிறந்தநாள் கொண்டாடுறான்.என்னடா சின்னப்புள்ளத்தனமா இருக்குன்னு நீங்க நெனைக்கறது என் காதுல கேட்குது.இருந்தாலும் சொல்ல வேண்டிய நம்ம கடமைய பண்ணித்தான ஆகணும்.

அது ஒண்ணும் பெரிய விசயம் எல்லாம் இல்லைங்க. இந்த மூள வளர்ச்சி நம்மள விட  கொஞ்சம் அதிகமா வளர்ந்து ஒரு வெள்ளை சட்டைய மாட்டிக்கிட்டு எதாவது ஒரு ரூமுக்குள்ள விட்டத்த பாத்திட்டு இருப்பாங்களே....அதாங்க இந்த விஞ்ஞானினு சொல்லுவாங்களே...அவங்கதான். ஏற்கனவே கோக்குமாக்கா இருக்கற இந்த உலகத்துல
ஏகப்பட்ட கோடப் போட்டாய்ங்க.. அதுல ஒன்னுதான் இந்த “சர்வதேச தேதிக் கோடு (International Date Line)”.

அதாவது அந்த கோடு பயணம் செய்யற இடத்துல ஒரே நாட இருந்தாலும், ஒரே நாளா இருந்தாலும் கோட்டோட ஒரு பக்கம் ஒரு தேதி ஆகவும், இன்னொரு பக்கம் அடுத்த தேதி ஆகவும் இருக்குமாம். சும்மா சொல்லனும்னா, இப்போ நம்ம சென்னைய எடுத்துக்குவோம். நம்ம அண்ணா சாலை மேல அந்த கோடு போகுதுன்னு வச்சிக்கலாம். அப்போ அண்ணா சாலைக்கு இந்த பக்கம் இருக்கற திருவல்லிக்கேணில தேதி ஜுன் 8 அப்படின்னா, அண்ணா சாலைக்கு அந்த பக்கம் இருக்கற எழும்பூர்ல தேதி ஜுன் 7 ஆக இருக்குமாம். எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க...


சரி நம்ம மேட்டருக்கு வருவோம்...எல்லார்க்கும் ஒரளவு புருஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.
ஒரு சின்ன கதைல சொல்லுவோம். ஒரு அம்மா ஒரு படகுல போறாங்க..அவுங்க அந்த சர்வதேச நாள் எல்லைக் கோட்ட கடக்கறதுக்கு ஒரு நிமிசம் முன்னாடி அந்த நாட்டுல தேதி மார்ச் 1..அப்போ அண்ணன் பிறக்கிறான். அந்த கோட்ட கடந்த பின்னாடி அந்த நாட்டுல தேதி பிப்ரவரி 28. அப்போ தம்பி பிறக்கிறான். அவ்வளவு தாங்க.. கதை முடிஞ்சுது...இருங்க இருங்க! நீங்க அடிக்க வரது புரியுது..ஒரு நாள் தானே வித்தியாசம், எப்படி இரண்டு நாள்னு கேட்கிறது புரியுது..அதாவதுங்க இந்த லீப் வருடம் வரும் போது பிப்ரவரி 29 நாள் வருது. அதான்...அதே தான்...

எல்லாரும் பல்ல நறநறன்னு கடிக்கற சத்தம் கேட்குது..இருந்தாலும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுட்டு உங்க வோட்டு உரிமைய காப்பாத்திட்டு, கொஞ்சம் அறிவுரையும் சொல்லிட்டுப் போங்க...


Top Tamil Blogs by Tamilers

Tuesday, June 2, 2009

இந்தியா 2020 : வல்லரசு கனவை கனவாகவே மாற்றும் காரணிகள்!!!

இந்தியாவின் வல்லரசு கனவை கனவாகவே மாற்ற முயற்சிக்கும் காரணிகள் இவை:

 தவறு செய்தவனுக்கு தண்டனை
 நிச்சயம் – சட்டம் தன் கடமையைச் 
 செய்யும்...ஆனால் அரசியல்வாதி 
 ஆகிவிட்டால்? – சட்டம் அவன் கடமையைச்
 செய்யும்.


 ”ஜாதிகள் இல்லையடி பாப்பா”
 பொது மேடையில் புதிய
 ஜாதிக் கட்சி தலைவர் முழக்கம்..?

  கட்சிக்கு பயன் இல்லாததால்
  கூட்டணி மாறினோம் – அப்போது
  கொள்கை...? மக்கள்...?

  லஞ்சத்தை அடியோடு ஒழிப்போம்
  பொதுக்கூட்டத்தில் பேச பணம்
  வாங்கிய பேச்சாளர்..?  


  காவல் துறை உங்கள் நண்பன்
  அதனால்தான் அடிக்கடி கேட்கிறார்கள்
  வாராக்கடன் - எங்கும்..?

  பெண்களுக்கு 33% இட 
  ஒதுக்கீடு – மும்பையில் சிவப்பு
  விளக்கு பகுதிக்கு சிறப்பு அனுமதி.?

  எதிர்கால இந்தியா இளைஞர்
  கையில் – அரசு மதுக்கடையில்
  புதிதாக “பார்” வசதி அறிமுகம்
  அரசாங்க அறிவிப்பு...?


  ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக
  முறைப்படி ஓட்டுப்போட வேண்டும்.
  ஆனால் எத்தனை ஓட்டுகள்...?

  ஏற்றத்தாழ்வுகள் இல்லா சமுதாயம்
  படைப்போம் – தாழ்த்தபட்டோருக்கு தனி
  இட ஒதுக்கீடு கேட்கும் பேரணியின்
  முழக்கம்...?

  நடிகை காதலில் விழுந்தார்

  தலைப்புச் செய்தி – பட்டினியால்

 விவசாயி தற்கொலை கடைசிப்

  பக்க பொட்டிச் செய்தி ...?

  கோவிலில் கடவுளுக்கு பால்
  அபிஷேகம் – அடுத்த தெருவில்
  பாலில்லாமல் பச்சிளங்குழந்தை மரணம்..?

  காந்தி வழி நடப்போம்..புதுக்கட்சி
  தலைவர் முழக்கம் – ஆர்வமாய் கேட்ட
  கூட்டம். ஒரு கையில் பிரியாணியும்
  மறு கையில் காந்தி நோட்டுமாய்...?


  துடிப்பு மிக்க நூறு இளைஞரை
  கேட்டார் விவேகானந்தர் – ஆனால்
  இன்று நூறாயிரம் பேர் இருந்தும்
  ஒரு விவேகானந்தர் இல்லை.

   

  எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர் கையில்
  என்று எவனாவது சொன்னால் எட்டி மிதியுங்கள்.
  இவன் என்ன கிழித்தானாம் நமக்குச் சொல்ல. இருபது
  வருடத்திற்கு முன் அவன் கேட்ட அதே வாக்கியத்தை
  இன்றும் பிழை மாறாமல் சொல்ல மட்டுமே செய்கிறான்.
  எதுவும் செய்யவில்லை.


  நாமும் பிழை மாறாமல் சொல்ல போகிறோமா?
  இல்லை – பிழைகளை வெல்ல போகிறோமா?
  வேரூன்றி விட்டன விஷமங்கள்.. வெட்டி எடுக்க
  வீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.
  விண்ணைப் பிளக்கும் புரட்சி வேண்டும். போராடுங்கள்
  என்று மூன்றாம் மனிதனாய்ச் சொல்லவில்லை..போரிடுவோம்
  வாருங்கள் என்று முதல் மனிதனாய்ச் சொல்கிறேன்.

  நீயும் நானும் இளைஞர்கள்..உன்னுள் இருக்கும் சக்தி
  என்னுள் இருக்கும் புத்தி, புரட்டியெடுப்போம், புது
  சமுதாயம் படைப்போம். நமை வெல்ல எந்த நமனும்
  இல்லை. புன்னகை தேசத்தில் புது பூக்கள் படரவிடுவோம்...

  வா தோழா!!!. வாழ வைப்போம்!!! வாழ்ந்து காட்டுவோம்....

நண்பர்களே! ஏதோ எனக்கு தோன்றியதை கிறுக்கி உள்ளேன்.. நன்றாக இருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்...இல்லை என்றால் மறக்காமல் உங்கள் கருத்துகளை போடுங்கள்....


Top Tamil Blogs by Tamilers

Friday, May 22, 2009

கம்பீரமாய் டெல்லி சென்று காமடியாய் திரும்பி வந்த கலைஞர்அரசியல் என்றால் ஆப்பு வைப்பதுதான் என்பதை தெளிவாக புரியவைத்துவிட்டார்கள் காங்கிரஸ்காரர்கள். இங்கிருந்து கம்பீரமாக வெற்றி நடையுடன் சென்ற கலைஞரின் காலை உடைத்து வீல் சேரில் அனுப்பி விட்டார்கள். எப்படியாவது தன் வாரிசுகளுக்கு MP பதவி வாங்கியே தீரவேண்டும் என போனவருக்கு முதல் சந்திப்பிலேயே வைத்தார்கள் ஆப்பு.


காங்கிரஸின் முதல் வேண்டுகோளே அழகிரிக்கு மந்திரி பதவி என்று மட்டும் கேட்டு விடாதீர்கள் என்பது தானாம். இணை அமைச்சர் பதவி கூட கிடையாது என்று திட்டவட்டமாக சொல்லித்தான் அடுத்த பேச்சையே எடுத்தார்களாம்.

5 காபினட் மற்றும் 4 ராஜ்ய சபா பதவி என்று கேட்டனர். அதில் தன் இரண்டு செல்வங்களுக்கும், பேரனுக்கும் மற்றும் ராசா, பாலு ஆகிய இருவருக்கும். அதிலும் இரண்டு துறையில் தனித்துவம் வேண்டும் என்றார்கள். அதாவது மத்திய மற்றும் இணை அமைச்சர் பதவியும். ஆனால் காங்கிரஸ் அடுத்தடுத்து வைத்தனர் ஆப்பு. 

ஆப்புகளை 1, 2, 3 என வரிசைப் படுத்துவோம்.

1. அழகிரிக்கு மந்திரி பதவி என்ற பேச்சை எடிக்காதீர்கள்.


2. கனிமொழிக்கு ராஜ்ய சபா பதவி கூட தர முடியாது.


3. ஆர்.ராசா மற்றும் டி.ஆர்.பாலு இவர்கள் மந்திரி சபை பக்கமே வரக்கூடாது.


4. தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி தருகிறோம் ஆனால் போன தடவை போல இரண்டு துறை கிடையாது, வெறும் தொலைத்தொடர்பு துறை மட்டும் தான்.


இத்தனை ஆப்பு வைத்தவுடன் கலைஞர் கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்.
ஏற்கனவே பாலு சேது சமுத்திரம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை கடலில் கரைத்துவிட்டார். ராசா ஸ்பெக்ட்ராம் விசயத்தில் ராஜாவாகிவிட்டார். இன்னும் இவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்து தன் தலையில் தானே மண்ணைப் போட காங்கிரஸ் தாயாராக இல்லை. 

கலைஞரிடம் ஒரு கேள்வி : ஜயா, பிரச்சாரம் செய்ய முடியாது, நிற்க முடியாது, பொதுமக்களை நேரில் சந்திக்க முடியாது ஆனால் மந்திரி பதவிக்காக இங்கிருந்து விமானம் மூலம் எப்படி உங்களால் டெல்லி செல்ல முடிந்தது?.

கடைசி வரை தமிழன் இளிச்சவாயன் தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள்..


தோழர்களே! கட்டுரையை படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை பதியுங்கள்.
கடைசியாக ஒரு ஓட்டாவது போடுங்க சாமி....Top Tamil Blogs by Tamilers

Friday, May 15, 2009

கோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை

இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் விலை மதிக்கமுடியாத பொருள், இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும் 
ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர் வைரம்.

இதன் மதிப்பை சுலபமாக சொல்ல வேண்டும் எனில், “இதை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவு அளிக்க முடியும்”என்று அந்த கால வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இந்த வைரம் முதன்முதலில் அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரால் ஆந்திராவில் இருந்து கண்டறியப்பட்டது. பின்னர் கில்ஜி மீது படையெடுத்து வந்த குவாலியர் மன்னன் விக்ரமஜித்திடம் தஞ்சம் புகுந்தது.
அதற்கு பிறகு இந்தியாவை மெல்ல ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருந்த பாபரை எதிர்த்து நின்றனர் இப்ராஹிம் லோடியும், குவாலியர் மன்னன் விக்ரமஜித்தும். இங்கு தான் ஆரம்பம் ஆனது புகழ்பெற்ற பானிபட் போர். 
போரில் விக்ரமஜித் மடிந்து விட அவனுடைய குடும்பம் ஆக்ரா அரண்மனையில் ஒளிந்தகொண்டிருந்தது. பாபர் மகன் ஹுமாயூன் ஆக்ரா நகரை கைப்பற்றியபோது அந்த குடும்பத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அற்புதமான வைரத்தை ஹுமாயூனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

பின்னர் ஹுமாயூனிடமிருந்து பாரசீக மன்னன் ஷா தாமஸ் கைக்கு மாறிய வைரம் மீண்டும் தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷா மூலம் இந்தியா வந்தது. அதைத் தொடர்ந்து 17-ம் நூற்றாண்டில் ஷாஜகான் மூலம் மீண்டும் மொஹலாயர்கள் வசம் வந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. கி.பி. 1739-ல்
டெல்லியை நாசம் செய்த பாரசீக மன்னன் நாதிர் ஷா வசம் போனது.. கோஹினூர் – அதாவது, “மலையளவு ஒளிவீச்சு” என்று பெயர் வைத்ததும் நாதிர் ஷாதான். பின்னர் சில காலம் அவருடைய வாரிசுகள் கையில் இருந்த வைரத்தை பஞ்சாப் சிங்கம் ரஞ்சித்சிங் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்தார். 

பின்னர் ஆங்கிலேயர்கள் வசம் பஞ்சாப் போன பின் சர். ஜான் லாரன்ஸ் என்ற அதிகாரியின் கைவசம் வந்தது. அவர் தன் கோர்ட் பாக்கெட்டில் போட்டு பீரோவில் மறந்து வைத்து விட்டார். ஆறு வாரங்கள் கழித்து பதறியடித்துப் போய் அதை எடுத்து விக்டோரியா மாகாராணிக்குப் பரிசளித்தார். அன்று முதல் இன்று வரை பிரிட்டிஷ் கிரீடத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறது இந்த கோஹினூர் வைரம்..

தோழர்களே! கட்டுரையை படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை பதியுங்கள்.

Top Tamil Blogs by Tamilers

Tuesday, May 12, 2009

ரோமப் பேரரசன், சர்க்கஸ் விளையாட்டு மற்றும் கிளாடியேட்டர் படமும்:

ரித்திரத்தை ஒரு நிமிசம் திரும்பிபாருங்க!. அது நமக்கு கத்துக்கொடுத்தது ஒன்னுதான். நாம வாழனும்னா யார வேணா, எப்ப வேணா கொல்லலாம்.ஒரு அரசன் எப்படா சாவான் அப்படினு மக்கள் எதிர்பார்த்த அரசர்கள் வரிசைல முதலிடம் பிடிக்கும் மன்னன் ரோமப் பேரரசன் கலிக்யூலா.கிளாடியேட்டர் படத்துல வர மிகப் பெரிய அரங்கமும் அதில்மனிதர்களோடு மனிதர்களும்,விலங்குகளோடு மனிதர்களும்விளையாடும் கொடூர விளையாட்டான அந்த கால சர்க்கஸ் விளையாட்டைகண்டுபிடித்தவன் இந்த கலிக்யூலா. 

கி.பி.37-ல் சர்வாதிகாரி டைபீரியஸ் இறந்தவுடன் அரியணை ஏறியவன் அவனது மருமகனான கலிக்யூலா என்னும் கேயெஸ் சீசர் ஜெர்மானிகஸ்.
சிறுவயதில் ராணுவ வீரர்களுடன் போர்க்களம் சென்று ரத்தமும், சிதறிய உடல்களையும் பார்த்து மகிழ்வான் இந்த கொடூரன். செக்ஸ் விசயத்தில் பிஞ்சிலே பழுத்த பழம். முதன்முதலில் காதல் வயப்பட்டது தன் சொந்த சகோதரியிடம். அரியணை ஏறியவுடன் தன் சகோதரிகளின் கணவர்களை அடித்து துரத்தி விட்டு தன் படுக்கை அறைக்கு சகோதரிகளை கொண்டு வந்தவன்.

நாற்பதாயிரம் பேர் அமரக்கூடிய அந்த மாபெரும் அரங்கத்தில் புலிகளையும், கரடிகளையும் மனிதர்களோடு மோத விட்டு வேடிக்கை பார்த்தான். தினமும் கொண்டாட்டமும், குதூகலமும் ஆக இருந்ததால் அரசு கஜானா காலியாகிவிட்டது. இதனால் வீரர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது.
குறைவான சம்பளத்தின் காரணமாக இளைஞர்கள் போட்டியில் இருந்து விலகிவிட, வயதான கிழவர்களும் உணவில்லாமல் பட்டினி ஆக இருந்த நோஞ்சான் புலிகளும் மோதிக் கொள்வதை பார்த்த மக்கள் ஒழிக என்று கோஷமிட்டனர். அவ்வளவுதான் இதை கேட்ட கலிக்யூலா வீரர்களை ஏவி 
கோஷமிட்ட அனைவரது நாக்கையும் துண்டித்து நடு மைதானத்தில் இருந்த புலிகளுக்கு உணவாக்கினான். மேலும் உணவு பற்றாக்குறை காரணமாக விலங்குகளுக்கு ஜெயில் கைதிகளை கொன்று உணவாக்கினான்.

விபச்சார விடுதிக்கு சென்ற முதல் மன்னனும் இவனாகத்தான் இருக்க வேண்டும். அங்கு அவனுக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது, அதை அடுத்த நாளே செய்தான். அரசவையை கூட்டி நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் என் சகோதரிகளையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த போகிறேன், எனவே எல்லா வி.ஜ.பி களும் தினமும் என் சகோதரிகளை
அனுபவிக்க ஆயிரம் பொற்காசுகள் எனவும், யாரெல்லாம் தினமும் வர வேண்டும் என ஒரு பட்டியலும் போட்டு கொடுத்தான்

உச்சகட்டமாக, தன் குதிரை இன்ஸியேட்டஸ்க்கு அரசவையில் கான்சல் பதவி கொடுத்தான். (கான்சல் பதவி என்பது நம்முடைய மத்திய காபினட் அமைச்சருக்கு சமம்). இறுதியாக தன்னுடைய பிரதான மெய்க்காவலன் 
காஷியஸ் செர்பீயா என்பவனால் குத்தி கொலை செய்யப்பட்டான்.
இவனது வெறியாட்டத்தின் ஒரு பகுதி தான் இது. இன்னும் பல கொடுமைகள் செய்த இவனது இறப்புக்கு ஊரே மகிழ்ச்சியில் திளைத்தது.. இத்தனைக்கும் இந்த் கலிக்யூலா ஜுலியஸ் சீசர் பரம்பரையில் வந்தவன். அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப் பேரன் ஆவான்...


வெறி பிடித்தவனை பதவியில் அமர வைத்தால் மக்களும் நாடும் என்ன ஆகும் என்பதற்கு இவனே சரியான உதாரணம்....தோழர்களே! கட்டுரையை படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை பதியுங்கள்.


Top Tamil Blogs by Tamilers

Thursday, May 7, 2009

முகமது கஜினி : முதல் படையெடுப்பே வெற்றி – ஒரு வரலாற்று உண்மை....

தோல்வியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் வரலாற்றில் இருப்பவன் முகமது கஜினி. இந்தியாவுக்கு 16 முறை படையெடுத்து தோல்வியடைந்து மீண்டும் 17-வது முறை வெற்றி கண்ட மாவீரன் என்று இன்றும் பள்ளி புத்தகங்களில் வர்ணிக்கப்படுபவன். ஆனால் உண்மையில் கஜினியின் முதல் படையெடுப்பே வெற்றி தான். 

காபூல் நகருக்கு தெற்கே கி.பி.998 ஆம் ஆண்டு கஜினி என்ற நகரை ஆண்டு வந்தான் கஜினி முகமது..அந்த காலகட்டத்தில் இந்தியா என்றால் அனைவருக்கும் ஒரு வித மயக்கம் இருந்து வந்தது. அந்த மயக்கம் முகமது கஜினிக்கும் வந்தது. மாபெரும் படையுடன் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து சிந்து நதியை கடந்து பஞ்சாப் பீடபூமியை நோக்கி முன்னேறினான். அவனையும் அவனுடைய மாபெரும் படையை தடுத்து நிறுத்தினான் பஞ்சாப் மன்னன் ஜெயபாலன்..ஆனால் அசுரத்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஆப்கன் படையிடம் ஜெயபாலன் படையினரால் எதிர்த்து நிற்க முடியவில்லை. முதல் போரிலேயே மாபெரும் வெற்றி பெற்ற ஆப்கன் படையினர் பஞ்சாப் நகரை சூரையாடினார்கள். கொள்ளையடித்த செல்வத்தை ஒட்டகங்களில் ஏற்றவே பல மணி நேரம் செலவிட்டது ஆப்கன் படை. 

கஜினி முகமதுவுக்கு இந்தியா மிகவும் பிடித்து போய்விட்டது. கி.பி.1000-ல் ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு படையெடுப்பதை ஒரு திருவிழாவாக கொண்டாடினான். ஒவ்வொரு முறையும் இதே கதை, கொலை, கொள்ளை பின்னர் ஊர் திரும்புதல்..சௌராஷ்டிரா, கன்னோசி, மதுரா என வரிசையாக கொள்ளை மற்றும் கொலைகள். கஜினிக்கு ஒரு விசித்திர பழக்கம் உண்டு, தான் வெற்றி பெற்ற மன்னர்களின் விரல்களை வெட்டி சேகரித்து வைத்து கொள்வான். அப்படி சேகரித்தவை ஆயிரக்கணக்கில் இருக்கும்.

இறுதியாக கி.பி. 1025- ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் பாலைவனத்தை கடந்து குஜராத் நகருக்குள் அடிவைத்தான். அந்தரத்தில் தொங்கும் சிவலிங்கத்தை கொண்ட புகழ் பெற்ற சோமநாதர் ஆலயத்தை நோக்கி மாபெரும் படையுடன் வந்தான். கோயில் தானே என்று அலட்சியம் செய்தவனுக்கு காத்திருந்தது மாபெரும் ஆச்சர்யம்.. ஊர் மக்கள்
ஆயிரக்கணக்கில் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவனை எதித்து நின்றார்கள்..ஆனால் அசுரத்தனம் நிறைந்த அவன் படை முன்பு ஆன்மீக வீரம் எடுபடவில்லை. அனைவரையும் வெட்டி சாய்த்தான்.. சிவலிங்கத்தை கீழே போட்டு உடைத்து மாபெரும் வெற்றிச் சிரிப்புடன் நின்றான். அன்று அவன் கொள்ளை அடித்த தங்கத்தின் அளவு மட்டும் 6 டன்.


அன்று அவ்வளவு புகழ் பெற்ற கோயிலை சூறையாடியதால் தான் கிட்டத்தட்ட எல்லா வரலாற்று ஆசிரியர்களும் அதை மட்டும் பெறியதாக எடுத்து கூறினார்கள். அதற்கு முன் கஜினி செய்த அத்தனை அநியாயங்களும் இந்த செயலால் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.. இன்றும் நாம் வரலாற்றை தவறாக படித்துக்கொண்டு இருக்கிறோம். அன்பர்களே!..இது மதன் அவர்கள் எழுதிய புத்தகத்தின் வாசிப்பில் கற்றது..கட்டுரை பயனுள்ளதாக இறுப்பின் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்
Top Tamil Blogs by Tamilers

Thursday, April 30, 2009

பேருந்து கட்டணம் குறைப்பு : வாழ்க அரசியல் ! வாழ்க தேர்தல்!:

அன்பர்களே ! இந்த கட்டுரையை படித்தவுடன் வருடம் 
முழுவதும் தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும் என தோன்றும்.
சில நாட்களாக நான் பேருந்தில் பயணம் செய்யும் போது கட்டணம் மிகவும் குறைவு..LSS பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ . 2.50..ஆனால் சில நாட்களாக வெறும் 2 ரூபாய் தான். மக்களுக்கு ஆச்சர்யம் மற்றும் இன்ப அதிர்ச்சியாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.. என்ன ஒரு திறமையான நிர்வாகம் அப்படியே பூரித்துபோனேன்.

தேர்தல் எனும் ஒரு ப்ரம்மாஸ்திரத்தில் அப்படியே மக்களை வீழ்த்தி விட்டனர்.மேலும் M வரிசை பேருந்துகளை சில நாட்களாக காணவில்லை.காலையிலும் மாலையிலும் கூட்ட நெரிசலை தவிர்க்க அறிமுகம் செய்யப்பட்ட பேருந்துகள் அப்படியே நிரந்தரம் ஆகிவிட்டிருந்தன்..இப்பொழுது இல்லை...

இதை விட பெரிய ஆச்சர்யம்..சொகுசு பேருந்துகள் தான்..
குறைந்த பட்ச கட்டணமே 5 ரூபாய்..ஆனால் இன்று காலை

மாபெரும் அதிர்ச்சி..5 ரூபாய்க்கு பதில் வெறும் இரண்டு ரூபாய் தான். என்ன ஒரு ராஜதந்திரம்..இப்பொழுது அரசு கஜானா காலி ஆகி விடாதா...இல்லை மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நினைத்துவிட்டனரா....

எப்படி இருந்தாலும் மக்கள் ஒட்டு போடுவது தி.மு.க. அல்லது அ.தி.மு.க... எனவே கேட்க வழியில்லை என்பது தெளிவாக அவர்களுக்கு புரிந்து விட்டது....

எப்படியோ இன்னும் சில நாட்கள் மக்கள் சொகுசு பேருந்திலும் 
சாதாரண கட்டணத்தில் பயணம் செய்யாலாம்.....

பதிவை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.....
Top Tamil Blogs by Tamilers

Monday, April 27, 2009

பாரதியும் சாதிச்சான்றிதழும் --ஓரு கவிதை

ஜாதிகள் இல்லையடி பாப்பா....
பாடம் நடத்திகொண்டிருந்தார் ஆசிரியர்.....
பதறிவிட்டான் படித்துக்கொண்டிருந்த மாணவன்....

சற்று முன் அவனிடம் சாதிச்சான்றிதழ் கேட்ட
அதே ஆசிரியர்..........

எவர் கண்டார் இன்னும் சில தினங்களில்
பாரதியின் படமும் அவர் வரிகளும்

  சாதிச்சான்றிதழின் பின்புறம் இடம் பெறலாம்.............

கவிதை நன்றாக இருந்தால் உங்கள் கருத்துகளை பதியுங்கள்...


Top Tamil Blogs by Tamilers